செம்மொழி மாநாட்டை திசைதிருப்ப முயற்சி: கருணாநிதி

செம்மொழி மாநாட்டை திசைதிருப்ப முயற்சி: கருணாநிதி

சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:

கோவையில் நாம் நடத்தவிருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த பிறகு, எத்தகைய பயன்களை விளைவிக்கும் என்பதற்கு முன்னோட்டமாக ஓர் இனிய செய்தியை உடன்பிறப்பே, உனக்கும் தமிழ் உலகிற்கும் சொல்லுகிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நமது தமிழ் வல்லுநர்கள், மொழிக் காவலர்கள், ஆய்வாளர்கள் அகழ்ந்தெடுத்த அரிய கருவூலங்கள் பலவற்றை அடுத்தடுத்து பல்லாண்டு காலமாக அளித்து வருகிறார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் முன்னின்று நடத்திய சென்னை உலகத் தமிழ் மாநாட்டின் போது- “காரைக்குடி கம்பர்” எனப்படும் சா.கணேசன் போன்றோர் தனி அரங்கம் ஒன்றில் கல்வெட்டு ஆராய்ச்சி பற்றி கற்பித்த உண்மைகளை அப்பொழுதே கேட்டறியும் வாய்ப்பை நான் பெற்றதால் அதிலிருந்தே கல் வெட்டுகளிலும், பழங்கால செப்பேடுகளிலும் மனத்தைப் பறி கொடுத்தவன்.

இப்போதுகூட இந்தக் கோவை மாநாட்டில் கூடம் ஒன்றில் குண்டூசியைத் தொலைத்து விட்டு தேடியவனுக்கு குதிர் நிறைய தங்க நாணயம் கிடைத்ததைப் போல ஒரு நிகழ்ச்சி. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். ஏன்; தமிழ் உலகோடும்தான்! என்ன அந்த நிகழ்ச்சி? ஏன் அதனால் மகிழ்ச்சி? என்பதை இதோ விளக்குகிறேன்.

கோவை மாநாட்டில் கண்காட்சி அரங்கம் ஒன்று அமைத்து; அதில் வைத்திட வேண்டிய பொருள்களையெல்லாம் சேகரித்திடவும்; வைக்கப்படுகின்ற பொருள்கள் பற்றி காண வருவோர்க்கு விளக்கம் அளித்திடவும்-கண்காட்சிக் குழு ஒன்றை அறிவித்து-அக்குழுவுக்கு தலைவராக- அமைச்சர் தங்கம் தென்னரசை அமைத்திருக்கிறோம் அல்லவா; அவர் வாயிலாக நான் பெற்ற தகவல் ஒன்றை உன் செவி குளிர- சிந்தை குளிர தருகின்றேன்; படித்துப் பார்!.

கண்காட்சிக்கான பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது- சில நாட்களுக்கு முன்பு 20-5-2010 அன்று தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில்-மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது.

கழுக்காணி முட்டத்தில்- பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட – கைலாசநாதர் கோயில் உள்ளது. தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டிய போது-பத்து அடி ஆழத்தில் 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள் போன்றவைகள் கிடைத்துள்ளன.

பொதுவாக செப்பேட்டு முத்திரைகளில் உள்ள சின்னங்கள் புடைப்பாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தச் செப்பேட்டில் சின்னங்கள் பள்ளமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் புலி, இரண்டு கயல்கள் (மீன்கள்), நாணுடன் கூடிய வில், இவைகளுக்கு இருபுறமும் குத்து விளக்குகள், இவைகளுக்கு மேல் நடுவில் வெண்கொற்றக் குடையும், அதன் இருபுறமும் சாமரமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இம்முத்திரை 11 செ.மீ. விட்டமும், 2 செ.மீ. கனமும் கொண்டதாகும். தற்போது இவ்வளையத்தில் 86 செப்பேடுகள் கோக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பு காணப்பட்டாலும், இவற்றில் உள்ளது எண்பத்தைந்து செப்பேடுகளே. இந்த செப்பேடுகள் கோக்கப்பட்ட வளையத்தில் முத்திரையிடப்பட்டு, பிரிக்கப்படாத நிலையிலே உள்ளன.

இச்செப்பேடுகள் ஒவ்வொன்றும் 44 செ.மீ.நீளம், 21 செ.மீ. அகலம் கொண்டதாகும். இச்செப்பேட்டு முத்திரையின் விளிம்புப் பகுதியில் “தர்ம ஏதத் இராஜேந்திர தேவஸ்ய பரகேசரி வர்மணக ஸ்ரீமச்சாசனம் ஊர்வி ச சிரோபிஹ சேகரி” என்று கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. இதன் பொருளானது “இந்தத் தர்மம் இராசேந்திர தேவன் என்கிற பரகேசரி வர்மனால் உலகத்தின் உச்சியின் மீது (தலை சிகரத்தின்) வைக்கப்படுகிறது”.

இந்தச் செப்பேடு கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்) தனது முப்பத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.1053) அளித்த அறக்கொடையைக் குறித்து வெளியிடப்பட்டது. இவர் கங்கைகொண்ட சோழன் எனவும் கடாரங்கொண்டான் எனவும் வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற அரசனாகக் குறிக்கப் பெறும் முதலாம் ராஜேந்திரச் சோழனின் மூத்த மகன் ஆவார். ஆம், ராஜராஜ சோழனின் பேரனே முதலாம் இராஜாதிராஜனாவார்.

முதலாம் இராஜாதிராஜனோடு உடன் பிறந்த மற்ற சகோதரர்கள், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், மற்றும் அதிராஜேந்திரன் ஆகிய மூவராவர். முதலாம் இராஜாதிராஜன் இந்த ஆணையினை முடிகொண்ட சோழபுரத்தில் அதாவது பழையாறையில் இராஜேந்திர சோழன் என்ற பெயர் கொண்ட அரண்மனையில் கீழைப் பகுதியில் அமைந்திருந்த விஜயராஜேந்திரக் காலிங்கராயன் என்ற அரச இருக்கையில் அமர்ந்து வழங்கியுள்ளான்.

இவ்வாணை இராஜாதிராஜ வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டு நாட்டாருக்கும்(நாட்டுச்சபை உறுப்பினர்கள்), பிரம்மதேயக் கிழவர்களுக்கும் (காணி உரிமையுடைய பிராமணர்கள்) தேவதான, பள்ளிச்சந்தம், கணி முற்றூட்டு, வெட்டபேறு, அறச்சாலாபோகம் ஆகிய பிற அறக் கொடைகளுக்குரிய நிர்வாகத்தினரான ஊர்களிலார்க்கும் (ஊரவை உறுப்பினர்கள்), நகரங்களிலார்க்கும் (வணிகசபை உறுப்பினர்கள்) அனுப்பப்பட்டுள்ளது.

முதலாம் இராஜாதிராஜனின் தந்தையான முதல் ராஜேந்திரச் சோழன் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய மக்கள் நால்வரையும் அருகிலே அழைத்து நால்வரும் ஒற்றுமையோடு எப்போதும் இருக்க வேண்டுமென்றும்-நாட்டு மக்களுக்கு எப்போதும் நன்மை செய்வதையே அவர்கள் குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமென்றும் கூறி, அவர்களிடம் அதற்கான உறுதியைப் பெற்றுக் கொண்டான் என்றும்-அவர்களும் அவ்வாறே தங்கள் தந்தைக்கு உறுதியளித்ததாகவும் இந்தச் செப்பேடுகளில் காணப்படுகிறது.

பிற்காலச் சோழர்களில் முதல் அரசனாக அறியப்பெறும் விஜயாலயச் சோழன் தஞ்சையை பல்லவ மன்னனான கம்ப வர்மன் என்பவனிடமிருந்து கைப்பற்றி-பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் இச்செப்பேட்டில் காணப்படுகிறது. இதுகாறும் தஞ்சையை சோழர்கள் முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றியதாகவே அறியப்பட்டு வந்தது. மேற்சொன்ன இந்தச் செய்தி, ஒரு புதிய செய்தியாகும்.

இராஜாதிராஜ வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டினைச் சேர்ந்த தத்தமங்கலம், கூத்தனூர், பஞ்சவன்நல்லூர், கரம்பைக்குடி, மேல்நாகக் குடி, கீழ்நாகக்குடி, கொற்றநல்லூர், பெரியங்குடி ஆகிய எட்டு ஊர்களையும், திருவிந்தளூருடன் இணைத்து, அந்தந்த ஊர்களில் இவ்வாணைக்கு முன்னர் காணி உரிமையுடையோராய் இருந்த குடிகளை நீக்கியும், அதன் மீதுள்ள காராண்மை, மீயாட்சி ஆகிய உரிமைகளை நீக்கியும், வெள்ளான் வகை நிலங்கள் அனைத்தையும் மாற்றி, முப்பத்து மூன்றாவது பசானம் (ஆண்டு விளைச்சல்) முதல் சதுர்வேதிமங்கலமாக்கி அறிவித்து இவ்வாணை வழங்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளான புரவுவரிக் கண்காணி சோலை திருச்சிற்றம்பலமுடையான், ஜெயங்கொண்ட சோழ கோசலராயன், நாடுவகை செய்கின்ற சோழவளநாட்டு விளாநாட்டு கரிகால சோழ நல்லூருடையான் கேகயன் ஆதித்தனான கண்டராதித்த மூவேந்த வேளான், புரவுவரித்திணைக்களத்துக் கீழ்முகவெட்டி உள்ளிட்ட பலரும் உடனிருந்து ஊர்களனைத்தையும் அளந்து, ஒன்றாக்கிச் சதுர்வேதிமங் கலமாக அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாணையினை அளித்த மன்னன் முதலாம் இராஜாதிராஜனின் இறுதி ஆட்சி ஆண்டு முப்பத்தாறு (கி.பி. 1054) ஆகும். 36 ஆண்டுகள் ஆட்சி செய்து, மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லன் சோமேஸ்வரனை எதிர்த்துக் கொப்பத்தில் செய்த போரில் போர்க் களத்திலேயே யானையின் மீதமர்ந்தவாறே உயிரை ஈந்தவன் இம்மன்னன்.

ஏற்கனவே அண்ணன் இராஜாதிராஜனால் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்றிருந்த இரண்டாம் இராஜேந்திரன் அந்தப் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடி சூட்டிக் கொண்டு, தலைமையின்றி சிதறிய சோழப் படையை ஒழுங்குபடுத்தி தலைமையேற்று, ஆகவமல்லனின் தம்பி ஜெயசிம்மனைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கொல்லாபுரத்தில் தன் வெற்றித் தூணையும் நிறுவியவன்.

கொப்பத்துப் போருக்குச் செல்லும் முன்னர் அதற்கு முன்னாண்டில் (கி.பி. 1053) அண்ணனால் அளிக்கப்பட்ட இவ்வாணை அவனது தனயன் இரண்டாம் இராஜேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1061) வரியிலிட்டுச் செப்பேடாக்கித் தரப்பட்டுள்ளது. இரண்டாம் ராஜேந்திரச் சோழன் சோழ நாடு திரும்பிய பின்னர் தன் அண்ணன் முதல் ராஜாதிராஜன் போருக்குச் செல்வதற்கு முன்பாக வழங்கிய தானத்தை உறுதி செய்து வழங்கிய செப்பேடு இப்போது கிடைக்கப் பெற்ற செப்பேடாகும்.

மேற்குறித்த எட்டு ஊர்களிலுமுள்ள நிலங்கள் அனைத்தும் அளக்கப்பட்டு நீக்க வேண்டிய வற்றை நீக்கி, வெள்ளான்வகை, நிலங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி, கொடுக்கப்பட்ட நிலங்களுக்கான அளவுகளை மிக விரிவாகக் கூறுகிறது செப்பேடு. பின்னர் சதுர்வேதி மங்கலத்தில் கொடுக்கப்படும் பங்குகளும், அளிக்கப்பட்டோரின் பெயர்களும், அவரவர் ஊர், குடும்பப் பெயர்களோடு வரிசையாகக் கூறப்பட்டுள்ளன.

தொடர்ந்து அவர்கட்குப் பணி செய்யும் நாவிதர், ஈரங் கொல்லிகள் (வண்ணார்), மற்றும் பறை அறிவிப்போர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பங்குகள் குறிக்கப்படுகின்றன. இறுதியாக அறத்தைக் காப்போர் பெறும் பலன் கூறி முடிவுக்கு வருகிறது செப்பேட்டு வாசகம். எண்பத்தைந்து செப்பேடுகளைக் கொண்ட இச்செப்பேட்டில் முதல் எட்டு செப்பேடுகள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பகுதியாகும்.

எட்டாம் செப்பேட்டின் இறுதியிலிருந்து கோனேரின்மை கொண்டான் என்று தொடங்கும் தமிழ்ப் பகுதி, 85-ம் செப்பேடு வரை நீள்கிறது. இதில் தான் மேற்கூறிய அனைத்து விவரங்களும் உள்ளன. இச்செப்பேடுகளை எழுதி வரியில் இடப்பட்டது.

இரண்டாம் ராஜேந்திரன் காலத்திலாகும். எனவே, செப்பேட்டின் வளையத்திலுள்ள முத்திரையில் “பரகேஸரி வர்மன் ராஜேந்திரதேவனுடையது” என்று கிரந்த எழுத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் “இவ்வளையத்தில் கோத்த செப்பேடு எண்பத்தாறு” என்றும் வளையத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தமிழகச் செப்பேடுகள் எதிலும் இவ்வாறு செப்பேடுகளின் எண்ணிக்கை குறிப்பிடவில்லை என்பது சிறப்பாகும். இராஜாதிராஜனால் வெளியிடப்பட்டுக் கிடைத்திருக்கும் முதல் செப்பேடு என்ற பெருமைக்குரியது இச்செப்பேடாகும். தமிழகத்தில்-ஏன் இந்தியாவிலேயே கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரிய செப்பேட்டுத் தொகுதியாகக் கருதப்பட்ட முதலாம் இராஜேந்திரனின் 57 கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகளை விட அளவிலும், செப்பேடுகளின் எண்ணிக்கையிலும் பெரிதாக விளங்குவது இச்செப்பேடாகும்.

நான் இச்செப்பேடுகளைப் பார்வையிட்ட போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர், சுற்றுலாத் துறை செயலாளர், தொல்லியல் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஆகியோரும் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ரா.நாகசாமி ஆகியோரும் இருந்தனர்.

இச்செப்பேட்டின் வடமொழிப் பகுதியை நாகசாமி படித்துக் காட்டி இதுவரையில் கிடைத்த செப்பேடுகளில் இதுதான் எண்ணிக்கையிலும், அளவிலும் பெரிது என்று கூறினார்.

அப்போது நான் பெற்ற மகிழ்ச்சியினையும், நம் முன்னோர் குறித்த பெருமிதத்தையும் உன் போன்ற உடன்பிறப்புகள் அனைவரும் பெற வேண்டுமென்பதற்காகத் தான் இந்தக் கடிதம்.

இத்துணை சிறப்பு வாய்ந்த ஒரு மாநாட்டை உலகம் முழுவதும் உள்ள உத்தமத் தமிழர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து, வெளிநாட்டு அறிவொளி மிக்கார் வருகை தந்து, நடத்துகின்ற மாநாட்டின் பெருமையும் புகழும் எதிர்காலம் பற்றிய ஆக்கமும், ஊக்கமும் இங்குள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்.

அவரெல்லாம் நில்லா நெடுஞ்சுவராயிடுவர்! வில்லாம், புலியாம், கயலாம், நம் தமிழ்க் கொடிக்கு முன்னே தடம் காண முடியாமல் தாழ்ந்திடுவர்! தமிழ்ச் சிங்கக் கூட்டமாம் நம்மை; தடம் மாற்றிப் போடுதற்கு இந்தத் தரணியில் எவரும் இல்லை! பழம்பெரும் தஞ்சை மண்ணில் சோழ மன்னர் ராஜாதிராஜன் வழி வந்தோர் அன்றைக்கே திட்டமிட்டு நமக்கென புதைத்து வைத்த 86 செப்பேடுகளும் அதைத்தான் நமக்கு உறுதிப்படுத்துகின்றன!

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

4 பதில்கள் to “செம்மொழி மாநாட்டை திசைதிருப்ப முயற்சி: கருணாநிதி”

 1. செப்பேடுகள்: தாமிரப்பட்டயங்கள் – வரலாற்று ஆதாரங்கள் « சரித்திரவரைவியல்சித்தாந்தங்கள் Says:

  […] https://chemozhi.wordpress.com/2010/06/20/செம்மொழி-மாநாட்டை-திச… […]

 2. K. Venkatraman Says:

  Had the coppewr plates were found only during the last May 2010, immediatly, they must have been handed over to the ASI.

  But keeping them with Karunanidhi or others and making a statement through him, as if he is deciphering what has been written on the copper plates are ridiculous.

  It s quite amusing, being a Sanskrit hater and grudger, Karunanidhi reads Sanmskrit and gives meaning also.

 3. நொபுரு கராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது! | செம்மொழி Says:

  […] https://chemozhi.wordpress.com/2010/06/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%A… […]

 4. நொபுரு கராஷிமா: தமிழ், கல்வெட்டு, செம்மொழி மாநாடு, திராவிட இயக்கம் | ஆரிய-திராவிட இனமாயைகளும், கட Says:

  […] https://chemozhi.wordpress.com/2010/06/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: