சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில்? : கலந்தாய்வரங்கத்தில் தமிழறிஞர்கள் வாதம்

சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில்? : கலந்தாய்வரங்கத்தில் தமிழறிஞர்கள் வாதம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27587

சங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு: கோவை : “சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டது எந்த நூற்றாண்டில்’ என்பது பற்றி செம்மொழி மாநாட்டில் நடந்த ஆய்வரங்கத்தில், தமிழறிஞர்கள் விவாதித்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் ஆய்வரங்கத்தில், சங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு செய்ய இதுவரை நடத்திய ஆய்வுகள் குறித்த விவாதம் மாநாட்டின் நான்காவது நாளில் நடந்தது. கொடிசியா வளாகத்தின் தொல்காப்பியர் அரங்கில் நடந்த இந்த கலந்தாய்வில் தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் வரவேற்றார்.

சங்க கால இலக்கியங்கள் கி.பி. 8 ம் நூற்றாண்டு என்று சொல்கிற கருத்து: பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட் தலைமை வகித்துப் பேசியதாவது: “சங்க கால இலக்கியங்கள் கி.பி. 8 ம் நூற்றாண்டு என்று சொல்கிற கருத்து, ஆய்வு சான்றுகளின் அடிப்படையில் சரியாக அமையவில்லை. அதனால் அதற்கேற்ப சரியான ஆதாரங்களை கொடுக்கும் அளவிற்கு ஆய்வுகளை தமிழறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

சங்க இலக்கியம், புத்தருக்கும் கிரேக்கத் தொடர்பு ஏற்பட்ட காலத்திற்கும் முற்பட்டது: பேராசிரியர் பொற்கோ(பொன் .கோதண்டராமன்) பேசுகையில்,””பிற்காலத்தில் எழுந்த உளப்பாட்டுத் தன்மைப்பன்மை (நாம் என்பது) சங்க இலக்கியங்களில் இல்லை. இன்னும், “செய்யா’ போன்ற வினையெச்ச வடிவங்கள் மொழிப்பழமையைக் காட்டுகின்றன. சங்க இலக்கியம், புத்தருக்கும் கிரேக்கத் தொடர்பு ஏற்பட்ட காலத்திற்கும் முற்பட்டது’ என்றார்.

சங்க இலக்கியம் கி.மு. 6க்கு முற்பட்டது: பேராசிரியர் மணவாளன் பேசுகையில்,””பிறமொழிகளிடம் இல்லாத பொருளிலக்கண மரபை உருவாக்கிய சங்க இலக்கியம் கி.மு. 6க்கு முற்பட்டது’ என்றார். பேராசிரியர் கந்தசாமி பேசுகையில், “பக்தி இலக்கியத்தில் மானுடக்காதல் பொருளை மையப்படுத்தும் இலக்கிய மரபு, யாப்புமுறை, தத்துவ சிந்தனை, அதியமான் கல்வெட்டுச்சான்று ஆகியவற்றின் அடிப்படையில் சங்க காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது’ என்று கூறினார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்: தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “”பெருவழுதி, கொல்லிப்புறை, மாக்கோதை காசுகள் மற்றும் அதியமான் மோதிரத்தில் பிராமி எழுத்துக்கள் இருப்பதை பார்க்கும் போது நாணயவியல் சான்றுகளில் அடிப்படையில் சங்ககால இலக்கியங்கள் கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்,” என்று கூறினார்.

கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டு கி.பி. 6 முதல் 8ம் நூற்றாண்டில் தொகை செய்யப்பட்டு, 10 ம் நூற்றாண்டில் உரைகளாக எழுதப்பட்டன: பேராசிரியை சம்பகலெட்சுமி பேசுகையில்,” அரசியல் உருவாக்கம், சமூக அமைப்பு, வணிகவளர்ச்சி, நகர உருவாக்கம், சமய நிலை எழுத்துருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் சங்கப்பாடல்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டு கி.பி. 6 முதல் 8ம் நூற்றாண்டில் தொகை செய்யப்பட்டு, 10 ம் நூற்றாண்டில் உரைகளாக எழுதப்பட்டன’ என்றார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு., முதல் நூற்றாண்டை ஒட்டியே அமையும்: முனைவர் நாகசாமி பேசுகையில்,” சங்க காலத்திய பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி சொற்களைக் காண முடியாது. அதியமான், கொற்றன், பெருங்கடுக்கோ, பிட்டன் போன்றவர்களின் பெயர்கள் கி.மு., முதல் நூற்றாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளிலும், மட்பாண்ட ஓடுகளிலும் காணப்படுகின்றன. எனவே சங்ககால இலக்கியங்கள் இந்த காலகட்டத்தை ஒட்டியே அமையும்’ என்றார்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்: பேராசிரியர் சுப்பராயலு பேசுகையில்,”தமிழகத்திலுள்ள அரிக்கமேடு, கரூர், அழகன்குளம், கொடுமணல், கொற்கை போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தமிழகத்தில் 120 இடங்களில் பதிவாகியிருக்கும் இரும்புக் காலச்சின்னங்கள், புலிமான் கோம்பை, தாதப்பட்டி போன்ற இடங்களில் கிடைத்த எழுத்துடை நடுகற்கள், சங்கப்பாடல்களில் காணப்படும் ஆகோள் போன்ற சொற்கள் பதிவு செய்திருக்கும் எழுத்துக்களை பார்த்தால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் ‘ என்றார்.

சங்கப்பாடல்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு: பேராசிரியர் சண்முகம் பேசுகையில், ” தமிழக ரோமானிய வணிகம் பற்றிய பயணக்குறிப்புகள் இரு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட வணிக உடன்படிக்கைகளில் காணப்படும் பெயர்கள் சாத்தன், கணணன், கொற்றப்பூமான் போன்ற தமிழ் வணிகர் பெயர்கள், முசிறி போன்ற இடங்களில் நடந்த வாணிபத்தை வருணிக்கும் சங்கப்பாடல்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது’ என்றார்.

சங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம்: பேராசிரியர்கள் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கொடுத்த கருத்துக்களின் படி சங்ககால இலக்கியங்கள் கி.மு. 6 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்பதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெளிவோடு உறுதி செய்கின்றன, என்று ஆய்வரங்கம் நிறைவு செய்யப்பட்டது.

இந்த ஆய்வரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, கனிமொழி எம்.பி., ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விமர்சனம்:

 1. பெரும்பாலானக் கருத்துகள் அரைத்தமாவை அரைத்துவிட்டது போன்றுதான் உள்ளது, ஏனெனில் புதியதாக அவர்கள் ஒன்றும் சொல்லிவிடவில்லை.
 2. 100-200 வருடங்களில் ஏற்கெனெவே அச்சிடப்பட்டுள்ள புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளிலேயே, இதைவிட ஏராளமான விஷயங்கள் உள்ளன.
 3. வீ. ஆர். ரமச்சந்திர தீக்ஷிதர், பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மு. ராகவ ஐயங்கார், பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.டி. சிவராஜப்பிள்ளை, ………….முதலியோர் ஏற்கெனெவே அலசியிருப்பதைவிட புதியதாக ஒன்றும் காணோம்.
 4. காட்டுக்கழுதையே மேற்கிலிருந்து சிந்துசமவெளியாக இந்தியாவில் நுழைந்தது என்று அஸ்கோ பார்போல இதே மாநாட்டில் கூறும்போது, இவர்கள் இப்படி குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பது வேடிக்கையே.
 5. இந்த காலம் என்று சொல்லும்போது, ஆதாரங்களை சொல்ல வேண்டும். விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, – …………சொல்கிற கருத்து, ஆய்வு சான்றுகளின் அடிப்படையில் சரியாக அமையவில்லை, ……..இயற்றப்பட்டிருக்கலாம், இந்த காலகட்டத்தை ஒட்டியே அமையும்…………., சேர்ந்ததாக இருக்கலாம்…………….., என்று நீட்டி மடக்கிக் கொண்டிருந்தால், என்னத்தான் ஆராய்ச்சியின் தன்மை வெளிப்படுகிறது என்பது தெரியவில்லை.
 6. தமிழ் பேசத்தெரியும்-மேடையிலே மணிக்கணக்காகப் பேசத்தெரியும்-என்ற ரீதியில் உள்ளவர்கள் எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக அல்லது அவ்வாறு நடித்துப் பேசி கற்றுத்தேர்ந்தவர்கள் எல்லோரும் ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டால், இப்படித்தான் இருக்கும்.
 7. ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதுதான் சரி என்ற ரீதியில், வட்டத்தைப் போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்கின்றனரேத் தவிர, மற்றவகள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதில்லை.
 8. இப்படி சங்ககாலத்தை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போனால், பிறகென்ன செம்மொழி காலம், செவ்வியக்காலம், பொற்காலம்…………………….என்ற கூப்பாடெல்லாம்?
 9. பல்-கல்-மரம்-உலோகம் ……………….என்ற என்ற வளர்ச்சிக் காலத்தை ஏன் கணக்கீடு செய்யவில்லை?
 10. சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டது – என்றால், தமிழ் எப்படித் தோன்றியது, தமிழ் எப்பொழுது எழுதப்பட்டது, ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது, எங்கே-எப்பொழுது எழுதப்பட்டது…………என்ற முக்கியமான கேள்விகளுக்கும் விடை காணவேண்டும்.
 11. எல்லாவற்றிற்கும் மேலாக, சமஸ்கிருதத்திலிருந்து ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு சமஸ்கிருதத்தையே குடிகாரன் மாதிரி தூஷித்துக் கொண்டு எந்த அராய்ச்சியாளனும் ஆராய்ச்சி செய்யமுடியாது. ஆனால், இந்நிலைதான் மாநாட்டில் முழுவதுமாக வெளிப்பட்டுள்ளது.
Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “சங்க கால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில்? : கலந்தாய்வரங்கத்தில் தமிழறிஞர்கள் வாதம்”

 1. vedaprakash Says:

  தென் ஆசியா முழுவதும் சங்க இலக்கியத்தின் தாக்கம்
  பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010,23:43 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27661

  கோவை : “”தென் ஆசியா முழுவதும் சங்க இலக்கியத்தின் தாக்கம் உள்ளது,” என அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசினார்.

  தொல்காப்பியர் அரங்கில், “தமிழ்ச் செம்மொழியின் தனித்தன்மை’ என்ற தலைப்பில் முகப்பரங்கப் பொழிவு நடந்தது. நிதியமைச்சர் அன்பழகன் தலைமை வகித்தார்.

  அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசியதாவது:சங்க இலக்கியத்துக்கென தனி பாரம்பரியம் உள்ளது. இதை காவியங்கள் பிரதிபலிக்கின்றன. இந்திய ஆரிய மொழியில் உள்ள 2 சதவீத எழுத்துக்களே தமிழில் உள்ளன. ஆனால், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 70 முதல் 80 சதவீத இந்திய ஆரிய மொழி எழுத்துக்கள் உள்ளன. இருப்பினும், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தத்துவங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.ஆரம்ப காலத்தில் பிற செம்மொழிகளைப் போல், வாய்மொழி இலக்கியமாக இருந்த தமிழ் இலக்கியங்கள், அக்கால கவிஞர்களால் எழுத்தால் பதிவு செய்யப்பட்டது. சமஸ்கிருத மொழியில் இருந்த காவியங்களையும் அக்கால கவிஞர்கள் அறிந்திருந்தாலும், அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

  சங்க இலக்கியம் சமஸ்கிருதத்தை நம்பி இருக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட காவியங்களில் ஆன்மிக கருத்துகள் அதிகம் இருப்பினும், சங்க இலக்கியத்தில் மனித வாழ்க்கையின் அன்றாடச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளதால், தென் ஆசியா முழுவதும் சங்க இலக்கியத்தின் தாக்கம் அதிகம் உள்ளது.இவ்வாறு ஜார்ஜ் ஹார்ட் பேசினார்.

 2. vedaprakash Says:

  சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்கள்
  பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010,23:58 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=27700

  கோவை : “தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் சமம் என்பதையே வலியுறுத்துகின்றன’ என, வித்தாக விளங்கும் மொழி என்ற தலைப்பில் நடந்த பேச்சரங்கில் கூறப்பட்டது. செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, நடிகர் சிவகுமார் தலைமையில், “வித்தாக விளங்கும் மொழி’ என்ற தலைப்பில் பேச்சரங்க நிகழ்வு நடந்தது.

  சுப வீரபாண்டியன் ஆற்றிய துவக்க உரை: மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமல்ல; பண்பாட்டுக்கு வித்தாக அமைகிற, பண்பாட்டைக் கற்றுத் தருகிற, பண்பாட்டைக் கட்டமைக்கிற ஒன்றே மொழியாகும். தமிழ் எல்லா தரப்பினருக்குமான ஒழுக்கத்தைப் போதிக்கிறது. சமத்துவம் மறுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் வெடித்தது. மொழிகளின் மீது கை வைக்கப்பட்ட போது தான், மிகப் பெரும் போராட்டங்கள் எழுந்துள்ளன.

  எத்தனை முறை ஒடுக்கப்பட்டாலும், ஒரு இனம் எழுந்தே தீரும். நில வடிவிலான தேசியத்தை மத வடிவிலான தேசியம் வெல்லும். பாகிஸ்தான் பிரிவினை அதற்கு உதாரணம். நிலத்தில் ஒன்றுபட்ட போதும், மத ரீதியாக தனிநாடு கோரினர். விரைவிலேயே பாக்.,கிடம் இருந்து வங்கதேசம், மொழியை அடிப்படையாகக் கொண்டு தனிநாடு கோரியது. மொழி வடிவ தேசியமே இறுதியில் வெல்லும்.

  ஒரு மொழி காலம் கடந்து வாழ வேண்டுமெனில், அரசு, அரசியல் கட்சிகள்/இயக்கங்கள், சான்றோர்/அறிஞர்கள், ஊடகங்கள், மக்கள் என ஐந்து தளங்களிலும் விரிவுபட்டு இயங்க வேண்டும். பண்பாட்டை உயர்த்திப் பிடிக்காத எந்த மொழியும் நிலையாக வாழாது. இவ்வாறு வீரபாண்டியன் பேசினார்.

  நடிகர் சிவகுமார் பேசும்போது, “இந்தியாவில் தமிழும், சமஸ்கிருதமும் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே வளமையாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தமிழில் உலகம் உய்யத் தேவையான அனைத்தும் பகுத்தியும் கூறப்பட்டுள்ளன’ என்றார்.

  “யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற தலைப்பில் ஜெகத் கஸ்பர் பேசியதாவது: உலகில் 6,400 மொழிகள் இருப்பினும் ஆறு மொழிகள் மட்டுமே செவ்வியல் மொழிகள் என்ற அந்தஸ்து பெற்றுள்ளன. ஐ.நா., சபை 63 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு, உலகப் பொது மானுடத்தைப் பிரகடனம் செய்தது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கணியன் பூங்குன்றனார், “யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ எனக் கூறிவிட்டார். நாகரிகத்தின் உச்சத்தில் தானே இந்த செம்மையான வார்த்தைகள் பிறந்திருக்க வேண்டும்.

  இன்றைய விஞ்ஞானம் இன்று சொல்வதைத் தான், பொதுமையை, பிரபஞ்ச நிஜத்தை, ஆதார உண்மையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், “யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என தமிழ்ப் புலவன் கண்டுரைத்தான். தமிழ் வெறும் மொழியல்ல; எட்டு கோடி உயிர்களின் ஒருங்கிணைப்பாய் தானே எழுந்த பண்பாடு. இவ்வாறு ஜெகத் பேசினார்.

 3. ELAMARAN Says:

  nantu more detail demand

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: