சிந்துவெளித் தமிழ்ப் பெயர்கள்!

சிந்துவெளித் தமிழ்ப் பெயர்கள்

http://www.viduthalai.periyar.org.in/20100717/snews12.html

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்ற கருது-கோளும் (Dravidian Hypothesis), திராவிடர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு முன் மொழிவுகளும் இந்தி-யவியலின் மிக முக்கியமான ஆய்வுக்-களங்கள் ஆகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரண்டு வினாக்களுக்கும் இன்னும் முடிவான விடை கிட்டவில்லை. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று கண்டறியும் சாத்தியக் கூறுகள் மிகுதி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அய்ராவதம் மகாதேவன் ஒருபடி மேலாகச் சென்று, சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட மொழி சார்ந்தவை மட்டுமல்ல, பழந்தமிழ் அரசியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கருதுகிறார்.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பது உண்மையானால் அதற்கான தடயங்கள், எச்சங்கள் சிந்து சமவெளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது திராவிட மொழி பேசுவோர் வாழும் தென்னிந்-தியப் பகுதிகளிலும் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய இருமுனைச் சோதிப்-பிற்கான வாய்ப்பைப் பெயராய்-வுக் களம் வழங்குகிறது. சிந்து சமவெளி ஆய்வில் இடப்பெயராய்வின் துணையை நாடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஹரப்பா நாகரிகத்தின் மொழியைக் கண்டறிவதற்கு ஹரப்பா பகுதியில் வழங்கும் இடப்பெயர்கள் உதவக் கூடும் என்று அஸ்கோ பர்ப்போலா நம்புகிறார்.

மனித குலப் பண்பாட்டு வரலாறு ஒரு வகையில் பயணங்களின் வரலாறே. பயணப்பட்ட மனிதர்களோடு பயணித்-தது ஊர்ப்பெயர்களும் தான். அப்படி உலாப் போன ஊர்ப்பெயர்களின் தடங்களும், தடயங்களும் பூமியின் முதுகின் ஒவ்வொரு அங்குலத்திலும் உறைந்து கிடக்கின்றன _ பழைய பயணங்களின் பதிவுகளாய்.

இந்திய ஊர்ப்பெயர்களை, குறிப்பாகத் தமிழக ஊர்ப்பெயர்களைச் சிந்து சமவெளி உள்ளடங்கிய பாகிஸ்தான் மற்றும் அதன் மேற்கில், வடமேற்கில் உள்ள ஆப்கானிஸ்தான், துருக்மினிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊர்ப் பெயர்களோடும் மேலும், இந்நாடுகளின் ஊர்ப் பெயர்களைத் திராவிட மொழி இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையதாகிய சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்-டுள்ள இடப்பெயர்கள் மற்றும் மானு-டப் பெயர்களோடும் கணிப்பொறியின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்-துள்ளேன். இந்த ஒப்பாய்வு இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை வெளிக் கொணர்ந்து உள்ளது.

ஒரு புறம், சிந்து சமவெளிப் பகுதி-யிலும் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப்பெயர்கள் தற்போது தென்னிந்-தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப்பெயர்களை அச்சு மாறாமல் அப்படியே நினைவுப்-படுத்துகின்றன. அது மட்டுமன்றி, அவ்வடமேற்குப்புலத்தில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்-களின், தலைநகரங்களின் பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் பெயர்களை மட்டுமன்றி பல்வேறு பழந்தமிழ்க் குடிகளின், மன்னர்களின் பெயர்களையும், குடிப்-பெயர்களையும், வேளிர், அதியர் மற்றும் பல குறுநிலக் குடிகளையும் குறுநிலத்-தலைவர்களின் பெயர்களையும் அப்படியே நினைவுறுத்தும் இடப்-பெயர்கள் இன்னும் வழக்கில் உள்ளன.

மறுபுறம், தமிழகத்தில் இன்றும்கூட சிந்துவெளி இடப்பெயர்களோடு ஒப்பிடத்தக்க இடப்பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதோடு ஏராளமான சிந்து வெளி மற்றும் வடமேற்குப்புலப் பெயர்கள் தமிழகத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் வேளாண்குடிகள் மற்றும் வேளாண்குடிகளின் இடப்-பெயர்களாகவும், குலப் பெயர்களாகவும், குடிப்பெயர்களாகவும் விளங்குகின்றன. இவை, சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்பிற்குப் புதிய வெளிச்சம் தரும் என்பதில் அய்யமில்லை.

தரவுகள் வருமாறு:

1. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான மொழிகளின் பெயர்களை நினைவுறுத்தும் இடப்-பெயர்கள் வடமேற்குப் புலங்களில் வழங்குகின்றன.

2. தென்னிந்தியாவில், குறிப்பாக, தமிழ்-நாட்டில் வழங்கும் பல ஊர்ப் பெயர்களின் அச்சு மாறாத நகல் போன்ற பெயர்கள் வடமேற்குப் புலங்களில் உள்ளன. அவற்றில், சங்க இலக்கியப் பழைமை கொண்ட அமூர், ஆவூர், அய்யூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்களும் அடங்கும்.

3. தமிழ் ஊர்ப் பெயர்ப் பொதுக்-கூறுகளான (Suffixes) ஊர், நாடு, இல், ஆறு, வாயில், காடு, சேரி, துறை, குன்று, தலை, பள்ளி, பாக்கம், கானம், படப்பை, பொறை, சிறை, வாய், நகர், கூற்றம், கை, பேரி, பேர், பாரம், மணி, வரை மற்றும் மலை ஆகியவற்றை நினைவுறுத்தும் ஊர்ப்பெயர்கள் வடமேற்குப் புலங்களில் வழங்குகின்றன.

4. மேலும், தொல்காப்பியமும் ஏனைய சங்க இலக்கியங்களும் சுட்டும் நிலப் பிரிவுகளான (திணைப்பெயர்கள்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்கள் மேற் சொன்ன பகுதிகளில் உள்ளன.

5. சங்க இலக்கியங்களில் பதிவாகி-யுள்ள, அம்பர், கொற்கை, தொண்டி, தோன்றி, தொட்டி, கச்சி, காக்கை, கானம், கடவுட், கழாஅர், கொல்லி, கொங்கு, கோதை, கோழி, நாலை, நேரி, பாரம், பாழி, பூழி, பொத்தி, போஒர், மல்லி, மாந்தை, மோசி, வஞ்சி, வாகை, வீரை, துளு, மிளை போன்ற இடப்பெயர்கள் சிந்து வெளியிலும் அப்பாலும் அச்சு மாறாமல் அப்படியே வழங்குகின்றன.

6. மேற்சொன்ன பகுதிகளில் வழங்கும் அரங், கண்டீர், கவிர், குரால், மாறோக், மாந்தர், முதிரா, தொண்டக் என்ற இடப்பெயர்களுடன் அம் என்ற விகுதியைச் சேர்த்து சங்க இலக்கிய இடப்பெயர்களான அரங்கம், கண்டீரம், கவிரம், குராலம், மாறோக்கம், மாந்தரம், முதிரம், தொண்டகம் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியும்.

7. மேலும், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கிய நகரங்கள், போர்க்-களங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்களான வஞ்சி, தொண்டி, உறையூர், மதுரை, கூடல் கொற்கை, அட்டவாயில், கூடகாரம், தலையாலங்கானம், கழுமலம், காரியாறு, ஆமூர், வாகை, நேரி, பாழி போன்ற பெயர்களை நினைவுறுத்தும் இடப்-பெயர்கள்; பொதிகை, பொத்தி, பொதினி, அயிரை, ஆவி, நவிரம், பறம்பு, குதிரை போன்ற மலைப் பெயர்களை நினைவுறுத்தும் பெயர்கள்; கடல்-கோளில் அழிந்ததாகக் கருதப்படும் பஃறுளி ஆறு, குமரிக் கோடு, மற்றும் ஆற்றுப் பெயர்களான காவிரி, பொருநை, வையை, காரியா-று, சேயாறு போன்றவற்றை நினைவுறுத்தும் பெயர்-களும் உள்ளன. பக்ரோலி என்ற இடப்-பெயர் வழக்கிலுள்ள பகுதியிலேயே குமரி என்ற இடப்பெயர் வழங்கு-வதையும் இந்நிலப்பகுதி ஹரப்பா நாகரிகப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும் புறக்கணிக்க இயலாது.

8. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தின் (வட்டார வழக்குப் பகுதிகள்) பட்டியலாக உரையாசிரியர்கள் குறிப்-பிடுகிற அனைத்து இடங்களையும் நினைவுறுத்தும் பெயர்களை வட-மேற்குப் புலங்களில் காணமுடிகிறது.

9. இடப் பெயர்களுக்கும் குடிப்-பெயர்கள், குலப்பெயர்கள், தனிமனிதர்-களின் பெயர்கள் போன்ற மானுடப் பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அயர், களமர், மறவர், கோவலர், எயினர், காளை, விடலை, கானவர், மிளி, இடையர், பொதுவர் போன்ற குடிப்பெயர்களோடும், கொங்கர், கோசர், அண்டர், மழவர், மலையர், குறவர், ஆவியர் போன்ற பெயர்களோடும் நெருங்கிய தொடர்பு காட்டும் இடப்பெயர்கள் அங்கு உள்ளன.

10. சேர சோழ பாண்டியர் எனும் தமிழ் மூவரின் குடிப்பெயர்களையும், பொறை, கோதை, உதியன், ஆதன், குட்டுவர், கிள்ளி, வளவர், வழுதி, செழி-யன், மாறன் எனும் குலப்பெயர்/ குடும்பப் பெயர்களையும் ஒத்த பெயர்கள் அப்படியே இடப்பெயர்களாக விளங்குவது வியப்பை அளிக்கிறது.

11. இது மட்டுமன்றி, கரிகாலன், சிபி, கவேரன், மணக்கிள்ளி, செங்கணான், சேல்கெழு, களங்காய் கண்ணி, அந்து-வன், மாந்தரன், மார்பன், மாரிவண், மாறன் கீர்த்தி, காய்சின வழுதி போன்ற தமிழ் மன்னர்களின் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் மேற்-சொன்ன பகுதிகளில் வழங்குகின்றன.

12. கடையெழு வள்ளல்களின் பெயர்-களும், வேளிர், அதியர் மற்றும் ஏனைய குறுநிலக் குலத் தோன்றல்களின் பெயர்-கள், அவர்தம் நிலப்-பகுதிகள், ஊர்கள், காடுகள், மலைகள், போரிட்ட களங்கள் மட்டுமன்றி போர் செய்த எதிரிகளின் பெயர்களும் ஊர்ப் பெயராய் விளங்கி நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு வித்தியாசமான பல சங்கப் பெயர்கள் குறித்த நமது வினாக்களுக்கு விடையும் அளிக்கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சி, தித்தன், திதியன், பன்னி, நள்ளி, கிள்ளி, பேகன், கோடன், பாரி, பிட்டன், கொற்றன், பிண்டன், மத்தி, கட்டி, மூவன், அன்னி, மிஞிலி, கீரன், அந்து-வன், அழிசி, வெளியன், உதியன் மற்றும் ஆதன் ஆகிய பெயர்களை அப்படியே நினைவுக்குக் கொண்டு வரும் பெயர்களை நமது ஆய்வு அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளோடு பட்டியலிடுகிறது.

13. தமிழ் முனிவர் அகத்தியர் மர-போடு தொடர்-புடைய இடப்பெயர்கள், மலைப்பெயர்-கள், கண்ணகி கதையோடு தொடர்புடைய இடப்பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்கள், சங்க இலக்கியங்கள் கூறும் கடவுட் பெயர்கள், முருகன் வழி-பாட்டோடு தொடர்புடைய பெயர்கள் என்று இந்த ஒப்புமைப் பட்டியல் இன்னும் நீள்கிறது.

மேற்சுட்டியபடி, சிந்து சமவெளி நாகரிகத்தின் திராவிட, மிகக் குறிப்பாகத் தொல்தமிழ்த் தொடர்பை சிந்து ஹரப்பா பகுதிகளிலும் அதற்கு அப்-பாலும் வழங்கும் இடப்பெயர்வுகளைக் கொண்டு நிறுவுவது இயலும் எனில் அத்தொடர்பின் எச்சங்கள் தொன்மை-யின் தொப்புள் கொடியாய்த் தமிழ் நிலத்திலும் அங்கு வாழும் மாந்தர்தம் மாறாத அடையாளங்களி-லும் தென்பட-லாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்புடைய-தாகும். தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழக, கேரளப் பகுதிகளில் அண்மைக்-காலங்-களில் கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் அகழ்வாய்வுகளும் அவை தரும் தரவுகளும் சிந்து வெளித் திராவிடத் தொடர்புக்குச் சான்றளிக்-கின்றன.

கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்-தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.

கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்-கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்-சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணி–யூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.

கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்-தலை-வர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்-காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்-கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்-பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும். இது ஒரு பதச் சான்றாய்வே (Sample Study) ஆகும். பிற தமிழ்க்குடிகள் பற்-றிய ஆய்வுகள் இது போன்று மேலும் சான்ற-ளிக்கக் கூடும்.

இத் தரவுகளின் பெருவாரியான எண்ணிக்கை, பொருண்மை சார்ந்த தொகுப்பாக (Thematic cluster) வழங்கும் தன்மை, குஜராத், மகாராஷ்டிர மாநில ஊர்ப் பெயர்களில் காணப்படும் திராவிடக் கூறுகள் புலப்படுத்தும் பயன்பாட்டுத் தொடர்ச்சி போன்றவற்றைக் கருத்தில் கொண்-டால் இந்த ஒப்புமை யாவும் எதேச்சையாக நிகழ வாய்ப்பு இல்லை என்ற உண்மை தெள்ளத் தெளிவாகும்.

சிந்து சமவெளிப் பகுதியில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் ஒப்புமைச் சான்றாய் உறைந்-திருக்கும் ஊர்ப் பெயர்கள் மனித குல வரலாற்று மைல்கற்கள். பழைய பயணங்களின் பாதச் சுவடு-கள். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய வாய் மொழி வரலாறுகள் கற்பனை அல்ல எனக் காட்டும் வழித்துணைகள் பஃறுளி ஆற்றின் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டின் தேட-லுக்கான புதிய பரிந்துரைகள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தெளிவான உலகக் கண்-ணோட்டத்தின் பின்புலக் காரணிகள்.

புதுகைத் தென்றல் ஜூலை 2010

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: