Archive for the ‘ராஜநாயகம்’ Category

செம்மொழி மாநாட்டில் அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள்

ஜூன் 25, 2010

செம்மொழி மாநாட்டில் அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=25784

தமிழர்களின் துயர் துடைக்க போராடிய ஜெர்மனிய பேராசிரியர்: “தமிழர்களுக்கு எங்கெல்லாம் இன்னல்கள் ஏற்படுகிறதோ, அதைப்பற்றி கட்டுரை வாயிலாக கருத்துக்களை வெளிப்படுத்தி, தமிழர்களின் துயர் துடைக்க பாடுபட்டதுண்டு’ என்கிறார், ஜெர்மனி பல்கலை பெண் பேராசிரியர்.

“உலக நாடுகளில் தமிழும், தமிழரும்’ என்ற தலைப்பில் ஆய்வரங்கத்தில் பேச வந்திருந்த ஜெர்மன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர் டக்மா ஹெல்மன் ராஜநாயகம் அளித்த பேட்டி: ஜெர்மனியில் உள்ள லுட்மிகிஸ் மில்லியன் பல்கலை பேராசிரியராக பணிபுரிகிறேன். என்னுடைய கணவர் இலங்கை வாழ் தமிழர். தற்போது ஜெர்மனிய பிரஜை. தமிழில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சியினால், 70 ஆய்வுக் கட்டுரைகளை தயாரித்து, பல மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளேன். தமிழர்களுக்கு எங்கெல்லாம் இன்னல்கள் ஏற்படுகிறதோ, அதைப் பற்றி, கட்டுரை வாயிலாக என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவதுண்டு. இலங்கை பிரச்னை குறித்து அமைதிப்பேச்சுக்கு முன், “தமிழ்நெறிய உணர்வு’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை எழுதினேன்.

அது இலங்கையில் உள்ள அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது. அக்கட்டுரை அரசியல் வட்டாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் வாயிலாக விடுதலைப் புலிகளோடு அரசு பேச்சு நடத்த முயற்சித்தது. அது தோல்வியில் முடிந்தது. சுயமரியாதைக்கு தலைவரான பெரியார் எழுதிய கருத்துகள், அவரது கொள்கைகளை புத்தகங்கள் வாயிலாக படித்துள்ளேன். அதே போல தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய ஏராளமான கட்டுரைகளை படித்துள்ளேன். அவரது பேச்சுக்களை கேட்டுள்ளேன். இது போன்ற கட்டுரைகளை படித்ததின் வாயிலாக நான் இலங்கைத் தமிழர்கள் படும் துயரத்தையும் அவர்களது உணர்வுகளையும் கட்டுரைகளாக எழுதியுள்ளேன். அவை நாளிதழ்கள் வாயிலாக பிரசுரிக்கப்பட்டன. உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களைக்கூட நாங்கள் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு  டக்மா ஹெல்மன் பேசினார்.

அருகிலிருந்த அவரது கணவர் ராஜநாயகம் கூறுகையில், “ஜெர்மனிலுள்ள “நோக்கியா சீமென் நெட்ஒர்க்’ பிரிவில் பணிபுரிகிறேன். சென்னையிலுள்ள அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றேன்.  தமிழன் என்பதால் தான், என்னை இவர் திருமணம் செய்து கொண்டார். தமிழ் சம்பந்தமான நிகழ்வு உலகின் எந்த மூலை முடுக்கில் நடந்தாலும் அந்த இடத்தில் நாங்கள் இருவரும் சென்றுவிடுவோம். அதன் படி இந்த செம்மொழி மாநாட்டில் பங்கேற்றோம்’ என்றார்.

தமிழுக்கு நிகர் தமிழே: செக் குடியரசு பேராசிரியர் பேட்டி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26233

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010

தமிழுக்கு நிகர் தமிழே: செக் குடியரசு பேராசிரியர் பேட்டிகோவை : தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது என்று செக் குடியரசு பேராசிரியர் ஐரோஸ்லாவ்வாசெக் கூறினார்.

செக் குடியரசிலுள்ள சார்லஸ் பல்கலை பேராசிரியர் ஜரோஸ்லாவ்வாசெக் அளித்த பேட்டி:  செக்குடியரசின் தலைநகரான பிராக் பகுதியில் வசிக்கிறேன். 75 வயதை கடந்தவன். ஆனால் 30 வயதிலிருந்தே தமிழ் மொழி மீது ஈடுபாடு அதிகம். தமிழில் ஏராளமான ஆராய்ச்சி மேற்கொண்டு உலகம் முழுக்க ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளேன்.  என்னுடைய பல மொழி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்தது தமிழ். ஏனென்றால் தமிழ் தனித்துவமான மொழி. தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது. உலகின் முதன்மையான தொண்மையான மொழி தமிழ். திராவிட மொழியான தமிழுக்கு மற்ற மொழிகளோடு நெருங்கிய தொடர்புண்டு. ஏனென்றால் தமிழிலிருந்து ஏராளாமான மொழிகள் பிரிந்து சென்றுள்ளது.

தமிழ் மொழிக்கும் மங்கோலிய மொழிக்கும் நிறைய தொடர்பு உண்டு. மங்கோலிய மொழியில் கால் என்பதற்கு கோல் என்று கூறுவர். தமிழ் மொழியில் பேசுவதற்குள் மங்கோலிய மொழிக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் சில வார்த்தைகளில் மட்டும் வித்தியாசங்கள் உள்ளது. அதனால் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழியாகவே மங்கோலிய மொழியை என்னுடைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன்.  தமிழில் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க கால இலக்கியங்களை கரைத்துக்குடித்து விட்டேன். அதில் எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்டாலும் என்னால் விளக்கமளிக்க முடியும்.  திராவிட மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் எத்தனை அந்த மொழியின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நான் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ் ஆய்வரங்கத்தில் திராவிடமொழிகளுக்கும் “அல்தாய்’ மொழிக்கும் உள்ள உறவு குறித்து பேசுகிறேன். தற்போது சமஸ்கிருதத்தை முழுமையாக கற்றுவருகிறேன். முழுமையாக கற்ற பின் தமிழிற்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து பணியாற்றத்துவங்கியுள்ளேன்.  இவ்வாறு பேராசிரியர் ஜரோஸ்லாவ்வாசெக் கூறினார்.

தென்மாநில மொழிகளில் தமிழின் ஆதிக்கம் : கனடா பேராசிரியை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=25787

ஆல்பம்
கோவை: இந்திய மொழிகளில் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. வடமாநில மொழிகளில் ஐரோப்பிய மொழிகளின் ஆதிக்கம் கலந்துள்ளது. தென்மாநில மொழிகளில் தமிழின் ஆதிக்கமே உள்ளது என்று செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த கனடா டொரன்டோ பல்கலை பெண் பேராசிரியை கூறினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய தமிழ் ஆய்வரங்கத்தில் பேச வந்திருந்த கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலை பேராசிரியர் பிரென்தா இ.இ.பெக் அளித்த பேட்டி: நான் சிறு வயதில் கோவை வந்தேன். அப்போது கொங்குத்தமிழில் கொஞ்சி பேசும் தமிழை பார்த்து நாமும் தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது. அதனடிப்படையில் தமிழ் பேச முயற்சித்தேன். அதன் பின் தமிழில் எழுதினேன். தமிழ் ஆய்வு மேற்கொண்டேன். என்னுடைய முதல் ஆய்வு, “கொங்குநாட்டு கலாசாரமும் கொங்கு தமிழும்’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வுக்கட்டுரையை என்னுடைய பல்கலையில் சமர்ப்பித்தேன். ஆய்வுக்கட்டுரையில் கொங்கு நாட்டு மனிதர்களின் நிலை, பழக்கவழக்கம், நிதி நிர்வாகம், தொழில், விவசாயத்திலுள்ள பல்வேறு நிலை குறித்து விளக்கியுள்ளேன்.

இந்தியாவிலுள்ள பல மொழிகளில் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. வடமாநில மொழிகளில் ஐரோப்பிய மொழிகளின் ஆதிக்கம் கலந்துள்ளது. தென்மாநில மொழிகளில் தமிழின் ஆதிக்கமே உள்ளது. ஏனென்றால் தென்மாநில மொழிகளில் பல தமிழிலிருந்து பிரிந்து சென்றவை தானே. தமிழ் மொழி தனித்தன்மை பெற்றது. இம்மொழியிலிருந்து ஏராளமான மொழிகள் பிரிந்து சென்று செழுமையாகவே உள்ளதே தவிர தமிழை போன்று தனித்தன்மையை எப்போதும் பெற முடியாது. சகோதரத்துவம், வீரம், ஆட்சித்திறன் ஆகியவற்றை முன்னிருத்தி நடந்த நிகழ்வுகளின் பிரதிப்பலிப்பாக நடந்த அண்ணன் மார் கதையை படிக்க படிக்க கண்ணீர் விட்டதுண்டு. அதைப்பற்றி செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பேச உள்ளேன்.

அண்ணன் மார் கதையில் மூன்று சந்ததிகளின் நிகழ்வுகள் எப்படி இருந்தது என்பதை பற்றி தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அதை பற்றி நான் மேற்கொண்ட ஆய்வுகளை இந்த ஆய்வரங்கத்தில் பேச உள்ளேன். அண்ணன் மார் கதையோடு, மதுரைவீரன், காத்தவராயன், கோவன் போன்ற குறுநில மன்னர்கள் வாழ்ந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆய்வுக்கட்டுரை தயாரித்துள்ளேன். அதில் சமுதாயத்திற்கு தேவையான சகோதரத்துவத்தையும், பாசத்தையும் முன்னிறுத்தி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கருத்தை கொடுத்துள்ளேன். இவ்வாறு பிரென்தா இ.இ.பெக் கூறினார்.

தன்னுடைய பெயர் பிரென்தா இ.இ.பெக் என்பதை பிருந்தா என்று தமிழ்படுத்தி என்னுடைய பெயர் பிருந்தா என்று தமிழில் எழுதி காண்பித்து மகிழ்ச்சியடைந்தார். அமைதிக்கும் சகோதரத்துவத்திற்கும் புகழ்பெற்ற ஊர் கொங்கு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும், கொங்கு மன்னில் வாழ்ந்து மறைந்த நான்கு குறு நில மன்னர்களின் வாழ்க்கை காவியத்தையும் புத்தகமாக எழுதியுள்ளார். ஒலிப்பேழையாகவும் வெளியீடு செய்துள்ளார்.

ஜெர்மனி எனது பிறந்தநாடு தமிழ்நாடு நான் புகுந்தநாடு – ஜெர்மனி நாட்டு முனைவர் உல்ரிக் நிக்லாஸ் பேச்சு

ஜெர்மனி எனது பிறந்தநாடு தமிழ்நாடு நான் புகுந்தநாடு ஜெர்மனி நாட்டு முனைவர் உல்ரிக் நிக்லாஸ் பேச்சு

கோவை, ஜூன் 25_ கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தில் (24.6.2010) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனை-வர் உல்ரிக் நிக்லாஸ் வாழ்த்துரை வழங்கிப் பேசியதாவது:

நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, அண்மை யில்தான் தொன்மையும், பழம்பெருமையும் வாய்ந்த தமிழ் மொழிக்கு தகுந்த பட்டம் கிடைத்திருக்கிறது. கலைஞர் அவர்களின் பெரு முயற்சியா-லேதான் தமிழ் மொழி செம்மொழி ஆகிவிட்டது. இன்றைக்கு தொடங்-குகிற மாநாட்டின் மூலம், தமிழ்த் தாய்க்கு மேலும் ஓர் ஆபரணம் அணிவிக்கப் படுகிறது.

இந்த ஆய்வரங்கத் தொடக்க விழா மேடையில், எனக்கு வாய்ப்பு அளித்ததை, நான் பெருமையாகக் கருதுகிறேன். அதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில், என் சொந்த நாடு ஜெர்மனிக்கும், தமிழகத்துக்கும் நிலவி வரும் நீண்ட கால தொடர்பைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

17 ஆம் நூற்றாண்டி-லேயே ஜெர்மனியைச் சேர்ந்த Bartholomaeus ZIEGENBALG தரங்கம்பாடியில் தமிழைப் பயின்று, தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் பற்றிய செய்திகளை, கட்டுரைகளாகவும், நூல்களாகவும் முதன் முதலாக ஜெர்மன் மொழியில் வெளியிட்டுப் பரப்பியுள்ளார். முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, ஜெர்மனி-யில், தமிழ்க் கலாச்சாரத்தின் மீதுள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதற்கு ஓர் உதாரணம் நான் தற்போது தலைமை ஏற்று இருக்கும் Cologne பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை ஆகும்.

இத்துறை, Cologne பல்கலைக் கழகத்தில் 1963 முதல், இன்றளவும் செம்மையாக செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழில் இளங்கலை முதல், தமிழா-ராய்ச்சி பட்டப்படிப்பு வரை படிக்க வசதி உள்ளது. தமிழ்நாட்டிற்கு வெளியே இங்குதான் மிகப் பெரிய தமிழ் நூலகம் அமைந்துள்ளது. அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன. இதில் மிகப் பழைய மற்றும் அரிதான நூல்களும் அடங்கும்.

இவ்வாறு, தமிழகத்தைத் தவிர, ஜெர்மனியில் தமிழ்த்தாய்க்கு ஒரு வசிப்பிடம் ஏற்படுத்தும் முயற்-சி-யில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆண்டு, எட்டாவது தமிழிணைய மாநாடு நடைபெற எங்கள் தமிழ்த்துறை ஏற்-பாடு செய்தது. இப்போது 9- ஆவது தமிழிணைய மாநாடு கோவையில், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறுவது குறித்து, மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பழம் பெருமை வாய்ந்த தமிழ்த்தாய், கலைஞர் அவர்களின் பேராதர-வால், நவீன கணினி உலகத்தில் இணைந்துவிட்டாள். என்னுடைய உரையை 2 தனிப்பட்ட கருத்துகளைக் கூறி முடிக்க அனுமதி வேண்-டுகிறேன்.

ஜெர்மனி என்னுடைய பிறந்த நாடு என்றாலும், தமிழ்நாடு என்னுடைய புகுந்த நாடாகும். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் மருமகள் ஆகிய நான், என்னை தமிழ்த் தாயின் வளர்ப்பு மகளாகவே கருதி வாழ்கிறேன். இவ்வுலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி பெறவும், தமிழ்த் தாயின் புகழ் பாரெங்கும் பரவிடவும் வாழ்த்துகிறேன். வளர்க தமிழ்! ஓங்குக தமிழ்க் கலாச்சாரம்!! இவ்வாறு உல்ரிக் நிக்லாஸ் பேசினார்.

எங்கள் உயிரோடு கலந்த மொழி தமிழ் : ஜெர்மன் மாணவி ஸ்வேட்டா

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26402

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2010,23:47 IST

கோவை : “ஜப்பானில் பிறந்து ஜெர்மனில் வளர்ந்த நான், தமிழின் மீதிருந்த பாசத்தால் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல சிரமத்திற்கிடையே கோவைக்கு வந்தேன்’ என்றார், ஜெர்மன் பல்கலையில் சர்வதேச அரசியல் படிக்கும் மாணவி ஸ்வேட்டா.

அவர் கூறியதாவது: தமிழின் வளர்ச்சி அபாரமானது. தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் எல்லாமே போற்றுதலுக்குரியது. என் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர். ஜெர்மன் குடியுரிமை பெற்றவர். நான் சிறுகுழந்தையாக இருந்த போது ஜப்பானில் இருந்தோம். பள்ளிப்படிப்பின் போது ஜெர்மன் சென்றோம். தற்போது அங்கு தான் இருக்கிறோம். எங்களுக்கு ஆங்கிலம் வழக்கமாக பயன்படுத்தும் மொழியாக இருந்தாலும், எங்களது வீட்டில் தமிழ் பேசுகிறோம். தமிழிலுள்ள வரலாற்று சிறப்புகளை, எனது பெற்றோர் எனக்கு கற்பித்துள்ளனர். அதன் காரணமாக எனக்கு தமிழ் மீது அளவிற்கதிகமான பாசம் ஏற்பட்டது.அதனால், தமிழ் கட்டுரைகளை படிப்பதற்காக நான் தமிழை படிக்க கற்றுக் கொண்டேன். அதன் வாயிலாக ஏராளமான வீர காவியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்துள்ளேன்.

என் தந்தை, செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பேசுவதை கேட்கவும், மற்ற தமிழ் அறிஞர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்பதற்காக பார்வையாளராக இங்கு வந்தேன். செம்மொழி மாநாட்டில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை பார்க்கும் போது உலகின் இருகண்களும் திறந்திருப்பதை போல உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தமிழை பற்றி எவ்வளவோ விஷயங்களை தெரிந்து கொண்டேன். மீதமுள்ள மூன்று நாட்களில் இனியும் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ள இருக்கிறேன்.மேற்கத்திய நாட்டிய நடனங்களை போல, தமிழ் நாட்டிய நடனங்களை விரும்பி ரசிப்பது உண்டு. ஜெர்மனில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது.

அதனால், தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை “டிவி’யில் பார்த்து ரசிப்பதோடு, குறுந்தகடுகள் வாயிலாக பார்த்து ரசிப்பேன். தமிழை என்றுமே எங்களால் மறக்க முடியாது. உலகின் எந்த மூலை முடுக்கிற்கு சென்றாலும் எங்கள் உயிரோடு கலந்த மொழி தமிழ்.இவ்வாறு மாணவி ஸ்வேட்டா கூறினார்.